குன்றத்தில் தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2022 04:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா பிப். 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக உள் திருவிழாவாக நடக்கிறது.
வழக்கமாக திருவிழா நாட்களில் காலை, மாலையில் தினமும் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். பிப். 10ல் தெப்பத்திருவிழா அன்று ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பகுள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலையில் மூன்று சுற்றுகளும், இரவும் மூன்று சுற்றுகள் சுற்றி தெப்பத்திருவிழா நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள், தேரோட்டம், தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படவில்லை, தூய்மைப் பணிகள் நடைபெறாமல் உள்ளது. பக்தர்கள் கோரிக்கை: சில நாட்களுக்கு முன்பிருந்து கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெருமளவு திரும்பிவிட்டனர். இந்நிலையில் தெப்பத்திருவிழா தேரோட்டத்தை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.