பதிவு செய்த நாள்
05
பிப்
2022
11:02
புதுச்சேரி : கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற செடல் உற்சவத்தில் கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
கதிர்காமம், முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவசம் கடந்த 2ம் தேதி கரக உற்சவத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.அதன்படி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றது. இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி கரகம் வீதியுலா நடைபெற்றது.அப்போது பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வேண்டுதல் கொண்ட பக்தர்கள் செடல் அணிந்தும், அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்டோர் கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.மாலை அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் வந்து செடல் அணிந்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். தொடர்ந்து இருவரும், முதல்வர் ரங்கசாமியிடம் ஆசிர்வாதம் பெற்றனர். இரவு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது.