பதிவு செய்த நாள்
17
பிப்
2022
01:02
தஞ்சாவூர்: மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி இன்று (17-ம் தேதி) நடைபெற்றது. இதில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாசிமக விழாவினை முன்னிட்டு கடந்த பிப்.8 தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்துநாள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 9 ம் நாள் விழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. மேலும், பாணபுரிஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மகத்தன்று மட்டும் ஏகதினம் உற்சவமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயிலிருந்து சுவாமிஅம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர். பின்னர் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.