பதிவு செய்த நாள்
13
ஜூலை
2012
10:07
திருநெல்வேலி: நெல்லை அருகே, திருமலை கோவிலில் தங்கத் தேர் செய்வதில் முறைகேடு நடப்பதாக, கோவில் அதிகாரி வைத்துள்ள பதாகையால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத் தேர் கமிட்டி அமைப்பு: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே, அச்சன் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, திருமலைக் குமாரசாமி கோவில். இந்த கோவிலுக்கு, சில ஆண்டுகளுக்கு முன், தங்கத் தேர் கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தேர் செய்யப்பட்டு, அதில் தங்கம் பூசுவதற்கும் தயாராக இருந்தது. தற்போது, கோவில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரி, கோவில் வாசலில், ஒரு பெரிய, "பிளக்ஸ் போர்டை வைத்துள்ளார். அதில், அங்குள்ள தேரைக் குறிப்பிட்டு, "பல ஆண்டுகளாக இந்தத் தேர், இனம் தெரியாத நபர்களால், இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேரில், தங்கம் பொறிக்கப் போவதாக, போலியான நபர்கள், தங்கம், பணம் வசூல் செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மீறி வசூல் செய்யும் நபர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உபயதாரர்கள் அதிர்ச்சி: பெண் அதிகாரியின் செயல்பாடுகள், உபயதாரர்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரியை கண்டித்தும், அவரை மாற்றக் கோரியும், பக்தர்கள் தட்டிகள் வைத்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதுகுறித்து கோவில் உபயதாரர்கள் தரப்பில் கூறுகையில், "கோவிலின் வளர்ச்சிக்காக, மலைப் பாதையை ஏற்படுத்திய உபயதாரர்கள் தான், தற்போது தங்கத் தேர் அமைக்கவும் முயற்சித்து வருகின்றனர். இதுவரை, கிலோ கணக்கில் தங்கமும் சேர்ந்துள்ளது. உபயதாரர்களை, போலிகள், கிரிமினல்கள் என விமர்சித்துள்ள உதவி ஆணையர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அனுமதியில்லாமல் பணம் வசூல்? நெல்லை அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி கூறுகையில், "அறநிலையத் துறையிடம் அனுமதியில்லாமல் யாரும் வசூலில் இறங்கக் கூடாது. உபயதாரர்களை, கிரிமினல்கள் எனக் கூறி வைக்கப்பட்டுள்ள போர்டு குறித்து விசாரிக்கிறேன் என்றார்.