பதிவு செய்த நாள்
19
பிப்
2022
09:02
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் இதிகாசம் தொடர்புடைய சிவாலயங்கள் நிறைய உண்டு. அதில் சூரனுார் கைலாசநாதர் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இது அரக்கர் குல தலைவரான பத்மாசுரன் ஆட்சி செய்த இடம். சிவபக்தரான பத்மாசுரன் கடும் தவம் புரிந்து வந்தார். தவத்தின் வலிமையால் காட்சியளித்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்க சற்றும் யோசிக்காத பத்மாசுரன், நான் யார் தலையில் கை வைத்தாலும் உடனே அவர் மரணம் அடைய வேண்டும் என வரம் கேட்டார். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேறுவழியின்றி கேட்ட வரத்தை கொடுத்தார் சிவபெருமான்.
உடனே சோதித்து பார்க்க வேண்டும் என எண்ணிய பத்மாசுரன், சிவபெருமான் தலையிலே கை வைக்க ஆயத்தமானார். பயந்து போன சிவபெருமான் அங்கிருந்த காசிஅரளிப்பூவில் ஒளிந்து கொண்டார். பத்மாசுரனின் அரக்க குணத்தை அழிக்க விஷ்ணுவின் உதவியை நாடினார் சிவன். அழகிய பெண்ணாக மாறிய விஷ்ணு பத்மாசுரன் முன் தோன்றினார். அழகில் மயங்கிய பத்மாசுரன் சபல புத்தியால் அப்பெண்ணை அடைய ஆசைப்பட்டார். என்னுடன் நடனமாடி போட்டியில் வெற்றி பெற்றால் தன்னை அடையாளம் என மோகினி பெண் தெரிவிக்க, நடனப் போட்டி ஆரம்பமானது. எப்படியெல்லாம் நடனமாடுகிறாரோ அதே போல் நடனமாட வேண்டும் என்பது ஒப்பந்தம். மோகினியின் நடனத்திற்கு இணையாக நடனமாடிய போது அப்பெண் தன் தலையில் கை வைத்து ஆடுவாள். அதே போல் தன் தலையிலும் கை வைத்து பத்மாசுரன் ஆட அதே இடத்தில் மரணமடைந்தான். அங்குள்ள திருப்பாற்கடலில் அஸ்தியை கரைத்து விமோசனம் பெற்றார் சிவன். பத்மாசுரன் வாழ்ந்து ஆட்சி செய்த ஊர்தான் சூரனுார். இது 13 ம் நுாற்றாண்டில் நடந்த இதிகாசங்களில் ஒன்று. மதுரையை ஆண்ட மாறவர்மன் பாண்டிய மன்னர் சிவாலயம் எழுப்பி சிவனை வழிபட்டு வந்தார். மேலும் சிவாலயங்களில் எங்குமே இல்லாத இரட்டை கால பைரவர்களான ஆபத்தோத்தாரணர் காசிபைரவர், காலபைரவர் மகாகாளர் இருப்பது கூடுதல் சிறப்பு. தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர்களை விளக்கேற்றி வழிபட்டால் பில்லி, சூனியம், கடன் தொல்லை, குடும்ப கஷ்டம், உடல் நல கோளாறு என பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆபத்தில் மாட்டியவர்க்கு உதவிய புண்ணிய ஸ்தலமாக இருக்கும் சூரனுாரில் கால் வைத்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். காக்க தேவை நடவடிக்கைதெய்வசிகாமணி, கோயில் ஐயர்: வாரணாசி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு இணையானது சூரனுார் கைலாசநாதர், ஆனந்தவல்லி அம்மாள் கோயில். வேறு எங்குமே இல்லாத சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. நாட்டில் அகழிகள் கொண்ட 10 கோயில்களில் இதுவும் ஒன்று. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது. தேரோட்டம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடந்தன. வரலாற்று நிகழ்வுகள் பல மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. இதனை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரை தெளித்தால் பிரச்னைக்கு தீர்வு ராஜா, குருக்கள்: மகாவிஷ்ணு வந்ததால் விண்ணக பெருமாள் கோயில், புஷ்கரணி குளம் உள்ளது. ரிஷப வாகனம், மயில் வாகனம் உண்டு. மாதத்தில் இரு முறை புறப்பாடு நடந்தது. கால பைரவரை வழிபட்டு புண்ணிய நீரை தெளித்தால் போதும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இக் கோயிலை யொட்டி ஓடிய ஆற்றில் சங்கையா சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். காலப்போக்கில் வழிபாடுகள் குறைந்து சுவாமி சிலைகள் திருடு போயின. உரிய முறையில் வழிபாடு நடத்தி இதிகாச கோயில்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.