பதிவு செய்த நாள்
08
மார்
2022
11:03
சென்னை : கோவில்களில் சுவாமி புறப்பாட்டு வாகனங்களை பழுது நீக்கி, திருவிழாக்களுக்கு தயார் நிலையில் வைக்கும்படி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கியுள்ளார். அறநிலையத் துறை கோவில்களுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட்டுள்ள வாகனங்கள், இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயன்படுத்தப்படவில்லை. தற்போது, அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம், திருவிழாக்களில் சுவாமி வாகனம் உலா வர அனுமதிக்கப்பட்டு உள்ளது.
உள்பிரகாரங்களில் தங்கம், வெள்ளித் தேர்கள் வலம் வருகின்றன.பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, சுவாமி திருவீதியுலா வருவதற்கு ஏற்றவாறு, வாகனங்களை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்படி, பழநி தண்டாயுதபாணி சுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சுவாமி புறப்பாடு வாகனங்களை பழுது பார்க்கும் பணி துவங்கி உள்ளது.