தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி 8 நாள் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் மஞ்சளாறு ஆற்றங்கரையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. மார்ச் 1ல் திருவிழா துவங்கியது. 8ம் நாள் திருவிழா நேற்று நிறைவடைந்தது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது. இங்கு அம்மனுக்கு விக்கிரஹம் கிடையாது அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடந்து வருகிறது. மஞ்சளாற்றில் குளித்துவிட்டு காமாட்சி அம்மனை பக்தர்கள் வணங்குவர்.மாலை 6 மணிக்கு உருமி, சங்கு, சேகண்டி முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பல்வேறு காரியங்களுக்கு உத்தரவு கேட்பது வழக்கம் மேலும் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் நெய்யில் எரும்பு எதுவும் வராது 24 மணி நேரமும் நெய் விளக்கு எரியும். கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்: நேற்று 8ம் நாள் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், தங்களுக்குப் பிள்ளை வரம் கொடுத்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அந்தக் குழந்தையை கரும்பில் தொட்டில் கட்டி அதிகளவில் நேர்த்தி கடன் செலுத்தினர். தீச்சட்டி எடுத்தும் பொங்கல் வைத்து வழிபட்டனர். கோயில் அருகாமையில் அமைந்துள்ள கருப்பசாமிக்கு ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி பூஜை செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் வைரவன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.