உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2022 04:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமையான கோவில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில். முதலாழ்வார்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். புராண இதிகாசங்களில் கோவிலின் பெருமை எடுத்துரைக்கப்பட்டு இருப்பதன் மூலம் இக்கோவிலின் பழம் பெருமை உலகறிந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை 10ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 18ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
இத் தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பர். எனவே அன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்த பொழுது மேல்மலையனூர் அங்காளம்மன் தேர் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். மாவட்டம் பிரிக்கப்பட்டு விட்டதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பதன் மூலம், மாவட்டத்தின் சிறப்பை தமிழக மக்கள் அறிவதுடன், பக்தர்களும் விழாவில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தால், பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் தேரோட்ட தினத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைக்கின்றனர்.