பதிவு செய்த நாள்
19
மார்
2022
02:03
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று காலை பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நம்பெருமாள் தங்கக் கருட வாகனம், சேஷ வாகனம், கற்பக விருட்ச வாகனங்களில், சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி உத்திர நாளில் மட்டுமே நம் பெருமாளும், தாயாரும் ஒருசேர ஸேவை சாதிப்பர். அதன்படி, பங்குனி தேர்த் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, பங்குனி உத்திரத்தன்று, நம் பெருமாள்- தாயார் சேர்த்தி ஸேவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, தாயார் சன்னதியில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட நம்பெருமாள், காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். 12.00 மணிக்கு, கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.