பதிவு செய்த நாள்
25
மார்
2022
08:03
மானாமதுரை: மானாமதுரை சிப்காட் அருகே தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டிகள், பால்குடம் ஏந்தி, தீ மிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான பொங்கல் விழா கடந்த 16ந் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக, ஆராதனைகளும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் மற்றும் தீச்சட்டிகள் எடுத்தல், பூக்குழி இறங்குதல் ஆகியவற்றிற்காக நேற்று மாலை வைகை ஆற்றுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே வைகை ஆற்றிலிருந்து கிசாரி சுப்பிரமணியன் தலைமையில் பால்குடம்,தீச்சட்டிகள், சாமி உருவங்கள் குழந்தை உருவங்கள், பூ கரகங்கள் ஆகியவற்றை சுமந்து ஊர்வலமாக வந்தனர். வழி நெடுகிலும் தீச்சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே உள்ள தெருக்களில் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.2 கி.மீ., தூரம் ஊர்வலமாக வந்த பக்தர்கள் கோயில் முன்பாக பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டிகள் சுப்பிரமணியன்,நாகராஜன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர். திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ், சிப்காட் எஸ்.ஐ.,தாரிக்குல் அமீன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.