பதிவு செய்த நாள்
19
ஜூலை
2012
10:07
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் "அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டு "ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வரும் 22ம் தேதி காலை 7.40 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கோமதிஅம்பாள் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அம்பாள் சிவிகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்பாள் தங்க சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் திருவிழாவான 23ம் தேதி காலை 8.30 மணிக்கு சிவலிங்க தரிசனம் அலங்காரத்திலும், இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3ம் திருநாளான 24ம் தேதி காலை 8.30 மணிக்கு சிவலிங்க அபிஷேகம் அலங்காரம், இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் திருநாளான 25ம் தேதி காலை 9.15 மணிக்கு சிவலிங்கபூஜை அலங்காரமும், இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.5ம் திருநாளான 26ம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்மறை ஓதுதல் அலங்காரமும், இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6ம் திருநாளான 27ம் தேதி காலை 8.30 மணிக்கு யோகாசன ஆத்மார்த்தபூஜை அலங்காரமும், இரவு 10 மணிக்கு கனக தண்டிகையில் அம்பாள் வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7ம் திருநாளான 28ம் தேதி காலை 9.15 மணிக்கு கோசம்ரட்சனை அலங்காரமும், பகல் 11 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் வன்மீகநாதர் வீதி உலாவரும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8ம் திருநாளான 29ம் தேதி காலை 9 மணிக்கு வீணாகானம் செய்தல் அலங்காரமும், இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ம் திருநாளான 30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் திருநாளான 31ம் தேதி காலை 8.30 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் அலங்காரமும், இரவு 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.11ம் திருநாளான ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திரமவுலீஸ்வரருக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. பகல் 11.45 மணிக்கு அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபத்திற்கு வந்து சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு சங்கரலிங்கசுவாமி ரிஷபவாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்கசுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் திருநாளான 2ம் தேதி அன்று 12 மணிக்கு மூலஸ்தானம் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், இரவு சுவாமி, அம்பாள் சப்தாவர்ணம் ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து 3,4,5 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.