திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2022 08:04
சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா, வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். இரு வருடங்களாக கொரோனா தொற்றினால் கோயில் வளாகத்திலேயே திருவிழா நடந்தது. தேரோட்டம் நடைபெறவில்லை. தற்சமயம் கொரோனா விதிமுறைகள் இல்லாததால் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஏப். 10 ல் பொங்கல் விழா, ஏப். 11 ல் கயர் குத்து விழா, ஏப். 13 ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் மாலை , அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதே போல் திருத்தங்கல் எட்டு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவும் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏப். 11 ல் பூச்சட்டி, ஆயிரங்கண் பானை, உருவம் செலுத்துதல் நிகழ்ச்சியும் , மறுநாள் பால்குடம் , முளைப்பாரி ஊர்வலமும் , ஏப். 13 ல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் ஏப். 14 ல் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.