பதிவு செய்த நாள்
11
ஏப்
2022
11:04
திருச்சி: பி.கே.நாராயணன் என்பவர் எழுதிய, 106 திவ்ய தேசங்கள்- சிறப்புகளும், செல்லும் வழிகளும் என்ற நுால் வெளியீட்டு விழா, திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது.மனித வள மேம்பாட்டுக்கான ஆலோசகர் ஏ.நாராயணன் வெளியிட்ட நுாலை, ஆடிட்டர் சுதர்சன் பெற்றுக் கொண்டார்.
சுதர்சன் பேசுகையில், 106 திவ்ய தேசங்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் கூறி, அவற்றின் சிறப்புகளையும் தெரிவித்தார். பொதுவாக 108 திவ்ய தேசங்கள் என்று தான் குறிப்பிடுவர். ஆனால், பி.கே.நாராயணன் திருப்பரமபதம் ஆதித்ய தலம், திருப்பாற்கடல் சந்திர தலம் என்று குறிப்பிட்டு உள்ளார்.இது தவிர, தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் உள்ள திவ்ய தேசங்களை அபிமான தலங்களாகவும், புராண தலங்களாகவும் பட்டியலிட்டு, அந்த தலங்களுக்கு செல்லும் வழிகளையும், அவை அமைந்துள்ள தொலைவு பற்றியும் இந்த நுாலில் தெளிவாக விவரித்துள்ளார். இது தவிர, திவ்ய தேசங்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்கள் பூரம் அல்லது பூராடம் நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கத்தில் துவங்கி, திருப்பதியில் நிறைவு செய்வது நல்லது எனவும் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட கூடுதல் எஸ்.பி., சுஜாதா, திருச்சி வானொலி நிலைய துணை தலைமை இயக்குனர் அஜீதா மற்றும் மரகதவல்லி, ராஜு, துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், ரங்கா ரங்கா கோபுரம் முன், நுால் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.