பதிவு செய்த நாள்
16
ஏப்
2022
07:04
கூடலூர்: தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி விழாவிற்காக தேனி மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பாதுகாப்பு பணிக்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக -கேரள எல்லையில் கூடலூர் அருகே விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை. இக்கோயிலுக்குச் செல்ல குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., ஜீப் பாதை உள்ளது. இது தவிர லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., தூரம் தமிழக வனப்பகுதியில் நடைபாதை உள்ளது. பக்தர்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் இரண்டு பாதைகளிலும் 200 க்கும் மேற்பட்ட தமிழக போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பளியன்குடி பாதை: குமுளியிலிருந்து கேரள வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்களை பல்வேறு கெடுபிடிகளை கேரள வனத்துறையினர் செய்து வருகின்றனர். இதனால் தமிழக பகுதியான பளியன்குடி வனப்பாதையை பக்தர்கள் அதிகம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பாதையை கூடுதலாக பயன்படுத்தும்போது ரோடு வசதி ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும்.
மருத்துவ முகாம்: பளியன்குடி வனப் பாதை வழியாககோயிலுக்குச் சென்று திரும்பும் பக்தர்களுக்கு சித்தா பிரிவு மூலம் நிலவேம்பு, கபசுர குடிநீர், வழங்கப்படுகிறது. கோடை வெயிலை தணிக்கும் வகையில் நன்னாரி, காசினி சர்பத்கள், அத்திப்பழச்சாறு, மாதுளை மணப்பாகு, மலை நெல்லிச்சாறு, வெட்டிவேர் பானகம், புதினா சூப் ஆகியவை வழங்கப்படுகிறது. வனப்பகுதியில் நடந்து வரும் பக்தர்களின் உடல் வலியைப் போக்க எண்ணெய் மசாஜ், சித்தா தொக்கணம், வர்ம சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக ஹோமியோபதி மருத்துவ அலுவலர் மூலம் முகாம் நடத்தப்படுகிறது.