கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2022 08:04
நாகர்கோவில்: சித்ரா பவுர்ணமி நாளில் சூரியன் அஸ்தமிக்கும் அதே நேரத்தில் சந்திரன் உதிப்பதை காண நேற்று கன்னியாகுமரியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் நடக்கும் இந்த காட்சியை கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியிலும் மட்டும் தான் காண முடியும். நேற்று மாலை 6:00 மணிக்கு திரிவேணி சங்கமம், சங்கிலி துறை, கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட், மற்றும் கன்னியாகுமரி பழத் தோட்டம் முருகன் குன்றத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்திருந்தனர். மேற்கு பக்கம் அரபிக்கடல் பகுதியில் மேகமூட்டதால் சூரியன் மறைவதை காணமுடியவில்லை. ஆனால் கிழக்கு பக்கம் வானில் சந்திரன் அதிக வெளிச்சத்துடன் வந்ததை கண்டு பொது மக்கள் ஆனந்தம் அடைந்தனர். இதையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காணிக்கையாக வழங்கிய வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.