பதிவு செய்த நாள்
18
ஏப்
2022
08:04
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் 16ம் தேதி காலை 6.30 மணியளவில் எழுந்தருளினார். திருவிழாவின் ஒரு பகுதியாக மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழச்சி நடந்தது. இதனை முன்னிட்டு சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தேனூர் கிராமத்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கருட வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், இரவு ராமராயர் மண்டபத்துக்கு வந்தார்.
அங்கு விடிய விடிய தசாவதார அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர், கிருஷ்ணர், மோகினி உள்ளிட்ட அவதாரங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு விடிய விடிய பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தசாவதாரத்தில் கள்ளழகரை கண்டு தரிசித்தனர்.