பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
02:04
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பூசாரி தன்னை தானே சாட்டையால் அடித்து அம்மனை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
துடியலூர் அருகே உள்ள உருமாண்டாம்பாளையத்தில் பண்ணாரி அம்மன் கோயிலில் பவுர்ணமி குழு சார்பில், சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், கோவையில் உள்ள பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் தீர்த்தம், கொடுமுடி சிவன் கோவில் தீர்த்தம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் தீர்த்தம், சக்தி பண்ணாரி அம்மன் கோயில் தீர்த்தம், காரமடை ரங்கநாதர் கோவில் தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, கல்யாண விநாயகர், பண்ணாரி அம்மன் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, அலங்கார பூஜைகள் நடந்தன. பந்தம் ஏற்றி, மேளதாளம், பம்பை, உடுக்கைகளுடன் தேங்காய், பழவகைகள், பூக்கள், கண்ணாடி, சாட்டை ஆகியவற்றுடன் சுற்று பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பாட்டு பாடி அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வட்ட குண்டம் மற்றும் நீள குண்டம் அமைத்து, அதை சுற்றி பூக்களால் வேலி அமைத்து, மஞ்சள், குங்குமம், கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி பூசாரி சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டு, அம்மனை அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், நிலா, கண்ணாடியில் தெரியும்படி வைத்து, பெண் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற சித்ரகுப்தனை வேண்டி, மலர்தூவி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோயில் பவுர்ணமி குழுவினர் செய்திருந்தனர்.