பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
03:04
குளித்தலை, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், ரோப் கார் சோதனை ஓட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலையில் அமைந்துள்ள, ரத்தினகிரீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்ற சிவஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து, 1,178 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்கு, 1,017 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.
கடந்த, 2011ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில், ரோப் கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., திட்டத்தை கிடப்பில் போட்டது. கடந்த, 2017ல் ரோப் கார் பணிக்கான வேலை தொடங்கி மந்தமாக நடந்தது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்னதாக, சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் கடந்த ஆண்டு ஜூனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்பது மாதத்துக்குள் பணி முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். அதன்படி, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, பணி நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று காலை, ரோப் கார் சோதனை ஓட்டம் நடந்தது. குளித்தலை, தி.மு.க., - எம்.எல்.ஏ., மாணிக்கம் துவக்கி வைத்தார்.