பதிவு செய்த நாள்
25
ஜூலை
2012
10:07
ஈரோடு : பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, பல லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி மும்முரமாக நடக்கிறது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் கோவில்களில், பண்ணாரி மாரியம்மன் கோவிலும் ஒன்று.தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கும் குண்டம் பூக்குழி திருவிழாவில், பல லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்குவர்.பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிதி, பக்தர்கள் காணிக்கை ஆகியவற்றைக் கொண்டு, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. கோவில் மண்டபத்தில், அம்மனின் திருவுருவச் சிற்பங்கள் பொறிக்கும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அறநிலையத்துறையில் ஒதுக்கப்பட்ட நிதி, மக்கள் காணிக்கை, உண்டியல் நிதி ஆகியவற்றின் மூலம், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குடிநீர் வசதி, ஓய்வெடுக்க மண்டபங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஓய்வெடுக்க கட்டப்பட்ட மண்டபத்தில், அம்மனின் வண்ணச் சிலைகளை பொறிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கோவில் மண்டபத்தின் மேற்புறத்தில் அம்மனின் பல அவதாரங்களை விளக்கும் சிலைகள் வடிவமைக்கப் படுகின்றன. ஓரிரு மாதத்தில் பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.