அன்னுார் : கோவை அருகே அன்னுாரில், 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அன்னூரில், திருப்பூரை சேர்ந்த வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார் மற்றும் பொன்னுசாமி ஆய்வு செய்தனர். இந்த கள ஆய்வின்போது, 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்களை கண்டறிந்துள்ளனர். ஆய்வு மையத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது : பண்டைய காலத்தில் காவல் புரிந்து வாழ்ந்து மடிந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் மரபு இருந்துள்ளது. அன்னுார் குளக்கரையில் இரண்டு நடுகற்களும், மூன்று சாலை சந்திப்பில் ஒரு நடுகல்லும் கிடைத்துள்ளது. இவை அன்னுார் தர்மராஜா கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.மாவீரர்கள் நினைவாக எடுக்கப்பட்ட நடுகற்கள், தலைப்பலி அல்லது நவகண்ட சிற்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அன்னுாரில் 100 செ.மீ., உயரம், 40 செ.மீ., அகலம் கொண்ட இந்த தலைப்பலி வீர கல்லில் உள்ள மாவீரன் தன் இருகைகளிலும் உள்ள இரு கத்தியால், தன் தலையை தானே வீழ்த்தும்படி அமைந்துள்ளது.இங்கு கண்டெடுக்கப்பட்ட இரு வீரர் சிற்பம் அரிதாக காணப்படும் நடுகல் வகையைச் சேர்ந்தது. இதில் மாவீரன் வலது கையில் உள்ள வாளால் எதிரி வீரனின் வலது பக்கம் குத்தும் வகையிலும், தன் இடது கையில் வில் வைத்தபடியும் உள்ளார். இவை மூன்றும் 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.