தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழா: ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2022 02:04
ஈரோடு : தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மனின் தங்கையாக கருதப்படும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழா ஏப்ரல் 6-ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்ரல் 7-ல் கம்பம் நடப்பட்டது. நாள்தோறும் கம்பத்தை சுற்றியும், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள், கம்ப ஆட்டம் ஆடினார்கள் . ஏப் 19-ல் இரவு அம்மன் அழைத்தல் நடைபெற்றது. கோவிலின் முக்கிய நிகழ்வான குண்டம் விழாவையொட்டி இன்று வரம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் படைக்கலம் எடுத்து பவானிஆற்றுக்கு சென்று புனித நீராடி கோவிலுக்கு வந்தனர். கோவில் முன் அமைக்கப்பட்ட 6 அடி4 அடி நீளமுள்ள குண்டத்திற்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பூசாரி கோகுல் முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்கள், பள்ளி மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர். விழாவையொட்டி தண்டுமாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை இரவு வான வேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்.22-ல் திருவிளக்கு பூஜை, 23-ல் மஞ்சள் நீராட்டு விழா, நடைபெறுகிறது. அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. ஏப் 28. ல் மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.