பதிவு செய்த நாள்
22
ஏப்
2022
05:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சின்னதக்கேப்பள்ளியில் மஹாபாரத திருவிழா கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 11ல் கிருஷ்ணகிரி செல்வ விநாயகர் நாடக குழுவின் சார்பில், கிருஷ்ணன் பிறப்பு நாடகமும், 15ல் அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை அர்ச்சுணன் தபசு நாடகம் நடந்தது. இதில் நாடக குழுவினருக்கு கிராம மக்கள் பாதபூஜை செய்து வழிபட்டனர். வானத்தில் கருடனை பார்த்த பின், அர்ச்சுணன், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு மாடுபிடி சண்டையும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று (ஏப்., 22) குறவஞ்சி நாடகமும், 23ல் அபிமன்யு சண்டையும், 24ல் கர்ணன் மோட்சமும், 25ல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்துள்ளனர்.