பதிவு செய்த நாள்
26
ஜூலை
2012
10:07
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ஆக., 2 காலை 9.17 மணிக்கு நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி காலை 6 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் கொடிமரம் முன் எழுந்தருளினார். காலை 10மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு சுந்தரராஜ பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். விழா நாட்களில் தினமும் காலையில் தங்கப்பல்லக்கிலும், இரவில் முறையே சிம்மம், அனுமார், கருடன், சேஷம், யானை, பூச்சப்பரம், குதிரை வாகனங்களில் எழுந்தருளி கோயிலை வலம் வருவார். தேரோட்டம் ஆக.,2, காலை 9.17 முதல் 10.35 மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு சுந்தரராஜ பெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோட்டை வாசல் வரை தேரோடும் பாதையில் வலம் வருகிறார். நள்ளிரவு வரை கோயில் காவல் தெய்வமான 18ம் படி கருப்பண சுவாமிக்கு பக்தர்கள் சார்பில் சந்தனகாப்பு நடக்கிறது. ஆக.,3ல் திருவிழா சாற்று முறையும், மறுநாள் உற்சவ சாந்தியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில், பேஷ்கார்கள் கணேசன், சேது, மனோகரன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். துணை கமிஷனர் கூறியதாவது: கோயிலில் இரு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நிரந்தர கழிப்பறைகள் உள்ளன. ஆங்காங்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படும், என்றார்.