பதிவு செய்த நாள்
26
ஜூலை
2012
10:07
பரமக்குடி: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடந்தது. கோயிலில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி, அம்பாள் வெள்ளி அன்னம், சிம்மம், கமலம், ரிஷபம், கிளி, குதிரை போன்ற வாகனங்களில் அலங்காரமாகி விதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஜூலை24ல் அம்மன் தபசு மண்டபம் எழுந்தருளி, மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9.10மணிக்கு நாகநாதசுவாமி காசியாத்திரை புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் 9.40க்கு சவுந்தர்யநாயகி அம்பாளுக்கும், நாகநாத சுவாமிக்கும் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து இரவு திருமண கோலத்தில் சுவாமி மின்சார தீப ரதத்திலும், அம்மன் தென்னங்குருத்து சப்பரத்தில் உலா வந்தனர். திவான் மகேந்திரன், செயல்அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி, விசுவஇந்து பரிஷத் மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், நகர் தலைவர் முத்துலிங்கம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.