பதிவு செய்த நாள்
26
ஜூலை
2012
11:07
நகரி : திருமலையில் சட்டவிரோதமாக, கிறிஸ்துவ மத பிரசாரத்தில் ஈடுபட்ட திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மூவர் மீது, தேவஸ்தான அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான சுகாதாரத் துறையில், துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் ஈஸ்வரய்யா, கிருஷ்ணம்மாள், யசோதம்மாள் ஆகிய மூவரும் திருமலையில் உள்ள புதிய, "எப் டைப் விடுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள், கிறிஸ்துவர மத பிரசாரம் செய்து வருவதாக, தேவஸ்தான கூடுதல் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி சிவகுமார் ரெட்டிக்கு கடந்த, 18ம் புகார் வந்தது. இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. திடீர் சோதனை துப்புரவு தொழிலாளர்கள் குடியிருக்கும் விடுதிகளில், விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த வீடுகளில் கிறிஸ்துவ மதம் தொடர்பான பிரசார போஸ்டர்கள், நோட்டீஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யசோதம்மாளிடம் விசாரணை நடத்தியதில், தனது குடும்ப உறுப்பினர்கள் மத பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செயல்பட்டு வந்ததாக கூறினார். இதையடுத்து, தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜூ, மத பிரசாரத்தில் முக்கிய தொடர்புடையை துப்புரவு ஊழியர்கள் மூவரையும், உடனடியாக கீழ் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாகத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் குடியிருந்த வீடுகளையும் காலி செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பின்னர், திருமலையில் குடியிருக்கும் தேவஸ்தான ஊழியர்களின் வீடுகளிலும், விஜிலென்ஸ் அதிகாரிகள், பாதுகாப்பு போலீசாருடன் நேற்று முன் தினம் தீவிர சோதனையிட்டனர். எச்சரிக்கை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் பாபிராஜூ கூறுகையில், "தேவஸ்தான ஊழியர்களே, இது போன்ற செயல்களில் ஈடுபடுவர் என, நினைத்துக் கூட பார்க்கவில்லை. இச்செயல் சகித்து கொள்ள முடியாதது என்றார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், இதர மத பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.