பதிவு செய்த நாள்
26
ஏப்
2022
10:04
ஆவடி: திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவிலில் பராமரிப்பற்று கிடக்கும், 60 ஆண்டுகள் பழமையான மரத்தேரை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அருகே, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள பக்தவச்சல பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் 58வது திருத்தலம்.சமுத்திரராஜனுடன் கோபித்துக் கொண்ட திருமகள், கோபம் தணிய வந்து நின்ற ஊர் என்பதால், திருநின்றவூர் என அழைப்படுவதாக, தல வரலாறு வாயிலாக தெரியவருகிறது.மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் சிறப்பாக, 60 ஆண்டுகள் பழமையான, தேக்கு மரத்தாலான தேர், பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.இதை, அரசு சீரமைக்குமா என, பக்தர் ஒருவர் மனமுருக சமூக வலை தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் திருத்தேரில் வலம் வரும் பக்தவச்சல பெருமாளை, தரிசிக்கும் வகையில், 75 அடி உயரம் கொண்ட இந்த தேரில், திருத்தமான பல்வேறு முக பாவம், நடன அசைவுகளுடன் சுவாமியின் திரு உருவம் மற்றும் யானை, குதிரை என, பல்வேறு உயிரினங்களின் 80க்கும் மேற்பட்ட உருவங்கள், அழகிய சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
அதை நுட்பமாக உருவாக்கியவர்கள், தங்களுக்கான ஊதியத்திற்காக மட்டும் பணியாற்றி இருந்தால், அவை இத்தனை தெய்வீக உயிர்ப்புடன் இருந்திருக்காது.அதற்கும் மேலாக, தேரை உருவாக்க பணியாற்றியோரின், அதீத தெய்வ பக்தியே, இதுபோன்ற அழகிய ஆன்மிக தேர் உருவாக முக்கிய காரணமாக இருந்திருக்கும்.இந்த தேர் முழுதும் தேக்கு மரத்தாலும், அதன் பிரமாண்டமான இரண்டு சக்கரங்கள் வேங்கை மரத்தாலும் வடிவமைக்கப்பட்டவை. கடந்த, 2009ம் ஆண்டுக்குப் பின், இந்த கோவிலுக்கு புதிய தேர் பயன்பாட்டிற்கு வந்தது. அதுவரை, கோவில் விழாக்களின் பயன்பாட்டில் இருந்த பழைய தேர், அதன் பின் உரிய பராமரிப்பின்றி, சிதிலம்அடைந்தது.கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில், குப்பையில் வீசப்பட்ட வைரக்கல்லாய் கிடந்து, மழை, வெயிலால் சிதிலமடைந்தது. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், தெய்வீக சிற்பக்கலை வடிவமைப்பில் உருவான, தேரின் நிலை கண்டு ஆதங்கப்பட்டனர். அதை பயன்படுத்த முடியாத நிலை என்றாலும், இயன்றவரை சீரமைத்து, கோவிலின் பழமையான புகழுக்காக காட்சிப்படுத்தலாமே என்கின்றனர். கடந்த மாதம் அதற்கான வீடியோ பதிவு, சமூக வலைதளத்தில் பரவிய பிறகு, கோவில் நிர்வாகத்தினர், அதை பிளாஸ்டிக் ஷீட் வாயிலாக மூடி வைத்துள்ளனர்.இது குறித்து, கோவில் நிர்வாகத்தின் தரப்பில் கூறியதாவது,தேரின் நிலை குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அரசின் பரிசீலனைக்குப் பின், தேர் சீரமைக்கப்பட்டு பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கோவிலின் சிறப்புக்கான ஆன்மிக காட்சிப் பொருளாக பராமரித்து பாதுகாக்கப்படும் என்றார்.