பதிவு செய்த நாள்
03
மே
2022
07:05
செஞ்சி: செஞ்சி பகுதியில் பிரசித்தி பெற்ற செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி கோட்டை ராஜகிரி மலைமீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடத்துகின்றனர். இந்த ஆண்டு தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீகமலக்கன்னியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன், ராஜகாளியம்மன், கோட்டை வீரனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கணபதி, லட்சுமி மற்றும் 108 திரவிய ஹோமம் நடந்தது. 10 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு அணிவித்தலும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, உபயதாரர்கள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் 9ம் தேதி வரை தினமும் சிறப்பு, அபிஷேக, அலங்காரம், சாமி வீதி உலாவம் நடத்த உள்ளனர். 10 ம் தேதி காலை 6 மணிக்கு 108 பால் குடம் ஊர்வலமும், 10 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தலும், பகல் 1.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது.11ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மாலை 4 மணிக்கு காப்பு களைதலும் நடக்க உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்து நடந்து வரும் கமலக்கன்னியம்மன் கோவில் திருவிழாவின் பாரம்பரிய முக்கியத்துவம் கருதி இக்கோவில் அமைந்துள்ள ராஜகிரி கோட்டைக்கு பொது மக்கள், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நேற்று முதல் இம்மாதம் 11ம் தேதி வரை இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கி உள்ளனர்.