பதிவு செய்த நாள்
04
மே
2022
11:05
மயிலாடுதுறை : குத்தாலம் அருகே சேண்டிருப்பு கிராமம், சுயம்பு முத்துமாரியம்மன் கோயிலில் 35ம் ஆண்டு பால்குட சித்திரை திருவிழா நடந்தது. 10000 திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேண்டிருப்பு கிராமத்தில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் புகழ் வாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் 35ம் ஆண்டு பால்குட சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த நிலையில் தொடர்ந்து 10 நாட்கள் சிம்ம வாகனம்,சூரிய பிரபை, யானை வாகனம், சப்பரம்,அன்னபட்சி வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், தேர் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று கோ பூஜை நடந்து குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பால்குடங்கள், காவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.மேலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா அபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்வில் சுமார் 10,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி ஆகியோர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இன்று அம்பாள் பரிவர்த்தனை நடைபெற்று மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.