பல்லடம்: இறைவன் தனது பேரொளியை காட்டும் இடம் கோவில் என,பல்லடம் அருகே, கோவில் ஆண்டு விழாவில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் மலையம்பாளையத்தில் உள்ள வடுகநாத சுவாமி கோவில், 13ம் ஆண்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு, லட்சார்ச்சனை, 108 வலம்புரி சங்காபிஷேகம் உள்ளிட்டவை நடந்தன. அங்கு தீர்த்தத்தின் மகிமை எனும் தலைப்பில், அனந்தகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: மனம் இல்லை என்றால் நாம் மனிதன் இல்லை. இறைவன் இன்பத்தை நமக்கு கொடுக்கவே கோவிலுக்கு வர வைக்கிறார். பேரொளியை காட்டும் இடமே கோவில். உலகிலுள்ள இன்பங்களுக்கு பெயர் சிற்றின்பம். பேரின்பத்தை காட்ட இறைவன் கோவிலுக்கு வர வைக்கிறான். ஆயிரம் இடம்புறி சங்கு உண்டாகும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு உருவாகும் என்று கூறப்படுகிறது. அப்படியானால், 108 வலம்புரி சங்குகள் தேவையெனில் பல ஆண்டுகள் வேண்டும். ஆயிரம் வலம்புரி சங்குக்கு பின் பாஞ்சஜன்ய சங்கும், ஆயிரம் பாஞ்சஜன்ய சங்குக்கு பின் சலம்சலம் சங்கும் கிடைக்கும். பிற நாட்டின் பெருமையை பேசும் நமக்கு வலம்புரி சங்கின் பெருமை தெரிவதில்லை. ஒரு சங்கில் குறிப்பிட்ட நேரம் புனித நீர் இருந்தால் அது மருத்துவ தன்மை பெருகிறது. தீயை விட கடும் பொருள் இல்லை. தீயில் வெந்த பிறகும் மாறாதது சங்கு மட்டுமே. அப்படிப்பட்ட சங்கில் நிரப்பிய நீர் எல்லா நோயையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, வேள்வி வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்க, அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.