பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் சன்னதியில் ராமானுஜர் வீற்றிருக்கிறார். தொடர்ந்து ராமானுஜரின் திரு அவதார உற்சவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமங்களுக்குப்பின், அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் உற்சவர் ராமானுஜர் அலங்கரிக்கப்பட்டு கோயில் பிரகாரத்தில் திருவீதி வலம் வந்தார். அப்போது பாகவதர்கள் கோஷ்டியினர் பாடல்கள் பாடியபடி சென்றனர். பின்னர் ராமானுஜர் பெருமாள் சன்னதியில் சேர்க்கையாகி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், திருநாம சங்கு சக்கர குழுவினர் மற்றும் ராமானுஜர் உற்சவதாரர்கள் கலந்து கொண்டனர்.