திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில், நடப்பாண்டிற்கான, பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் இரவு விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது. நேற்று, காலை 6:30 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடந்தது. அப்போது, கொடி மரம் எதிரில் உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.இரவு, கேடய வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 11ம் தேதி, தேர் உற்சவம், 12ம் தேதி, தெய்வானை திருக்கல்யாணம், 13ம் தேதி சண்முகர் உற்சவம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.மேலும், பிரம்மோற்சவம் நடக்கும் 11 நாட்களும், காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவ பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.