பதிவு செய்த நாள்
06
மே
2022
06:05
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தெலுங்கு வீதியில் உள்ளது பெருமாள் சுவாமி கோவில். இக்கோவில் பெருமாள் சுவாமிக்கும் துணை பரிவார மூர்த்தியினருக்கும் 8ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் தத்தமங்கலம் பிரம்மஸ்ரீ சங்கரன் நம்பூதிரிபாடின் தலைமையில் நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டியுள்ள நிகழ்ச்சிகளுக்கு நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாயின. தொடர்ந்து ஆச்சாரிய வரணம், மகாசுதர்ஷனஹோமம், உச்சிகால பூஜை, வேர்பாடு, பகவத் சேவை, அத்தாழப்பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (6ம் தேதி) காலை கணபதி ஹோமத்துடன் நடை திறக்கப்படும் கோவில் உஷபூஜை, திலகஹோமம், சாயூஜபூஜை, சாந்திஹோமம், சதுச்சுத்தி, தாரா, பஞ்சகவ்யம், பஞ்சகம், கலசபூஜைகள், கலசாபிஷேகம், பிம்ப்பப்பரிகாரம், பிம்பசுத்தி, நேந்திரோபீலனம், சயின பூஜை என சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை (7ம் தேதி) அனஞ்ஜா, கலசபூஜை, பிரார்த்தனை, ஜீவகலசபூஜை, சய்யில் எழுந்தருளச் செய்தல், பிரசாதசுத்தி, க்ஷோக்னஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்துபலி பூஜை, வாஸ்து கலசாபிஷேகம், பீடம், பிரதிஷ்டை, சய்யில் பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் திருவிழாவையொட்டி நடைபெறுகின்றன. 8ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் பெருமாள் சுவாமி கோயில் கோபுர கலசத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்.