பதிவு செய்த நாள்
06
மே
2022
06:05
செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பக்தர்கள் குவியும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு விழாக்காலங்களில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்காக யாத்ரீகர் நீவாஸ் கட்டுவதற்கான அறிவிப்பு இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது வெளியாகும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான அறிப்பு வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பக்தர்கள் அதிகம் வரும் ஆன்மீக சுற்றுலா தலமாக மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உள்ளது. மேல்மலையனுார் அங்காளம்மனை பல லட்சம் குடும்பத்தினர் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் பல லட்சம் பக்தர்கள் இங்கு குவிகின்றனர். இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் என பல ஆயிரம் பேர் இரவு மேல்மலையனுார் கோவில் வளாகத்தில் தங்கி காலையில் ஊர் திரும்புகின்றனர். ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்தி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். மாசி மாதம் நடக்கும் 13 நாள் உற்சவத்தின் போது மயானக்கொள்ளை, தீமிதி விழா, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியின் போது பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.
இது மட்டுமின்றி தமிழ், ஆங்கில புத்தண்டு தினம், காணும் பொங்கல் போன்ற நாட்களிலும் பல ஆயிரம் பேர் குவிகின்றனர். அத்துடன் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று என்பதால் சாதாரண நாட்களிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். ஆனால் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப இங்கு தங்கும் அறைகள், கழிப்பிடங்கள், குளியல் அறைகள் இல்லை. விழாக்காலங்களில் தற்காலிக ஏற்பாடாக கழிப்பிட வசதி செய்கின்றனர். பெண்கள் இரவு பாதுகாப்பாக தங்கவும், குளிக்கவும் எந்த வசதியும் இல்லை. பெரும்பாலானவர்கள் மேல்மலையனுாரில் தெருக்களிலும், கோவிலை சுற்றி உள்ள திறந்த வெளியிலும் தங்கு கின்றனர். எங்கு படுத்துதுாங்குகின்றனரோ அதே இடமே உணவருந்தும் இடமாகவம், கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். மழை வந்தால் ஒதுங்கவும் இடம் இருக்காது. திருவிழாக்கள் முடிந்த மறுநாள் மேல்மலையனுாரின் பெரும்பாலனா குறுக்கு தெருக்களும். சாலை ஓரங்களும் சுத்தம் செய்யப்படாத கழிவறை போல் காணப்படுகிறது. இதனால் மேல்மலையனுாரில் வசிக்கும் பொது மக்கள் பெரும் சுகாதார கேட்டிற்கு ஆளாகின்றனர். எனவே பக்தர்கள் இரவில் தங்கி செல்வதற்கு ஏற்ப குடிநீர், கழிவறை, குளியல் அறைகளுடன், பொருட்களை பாதுகாக்க லாக்ர் வசதியும் கொண்ட பிரம்மாண்டமான யாத்ரீகர் நிவாஸ் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசியல் காரணங்களால் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட மேல்மலையனுார் கோவில் வளர்ச்சி இனி தடைபடாது என்று பொது மக்கள் நம்பி இருந்தனர். இதனால் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறவிப்பில் மேல்மலையனுாரில் யாத்ரீகர் நீவாஸ் அமைக்க அறிவிப்பு வரும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் சட்டசபையில் வெளியான அறிவிப்பில் மேல்மலையனுாரில் நாள் முழுவதம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், வணிக வளாகம் கட்டவும், பக்தர்கள் வசதிக்கா பேட்டரி கார் இயக்கவும் அறிவிப்பு வெளியானது. நீண்டநாள் கோரிக்கையான யாத்ரீகர் நீவாஸ் கட்ட அறிவிப்பு வெளியாகாதது பக்தரகளிடமும், மேல்மலையனுார் பகுதி பொது மக்களிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.