வடமதுரை: அரசியல்வாதிகளிடம் சிக்கி இருக்கும் கோயில் இடங்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் ’ என கிராம கோயில் பூஜாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
பேரவையின் வடமதுரை ஒன்றிய பொதுக்குழு கூட்டம் முள்ளாம்பட்டியில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி பேசுகையில், ‘ அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி இருக்கும் கோயில் இடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகளிடம் தயக்கம் உள்ளது. நியாயமான முறையில் நடவடிக்கை எடுத்து அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்க வேண்டும். ஜூன் 19ல் திண்டுக்கல்லில் நடக்கும் மாவட்ட மாநாட்டில் பூஜாரிகள் தங்கள் குடும்பத்துடன் திரளாக பங்கேற்க வேண்டும்’ என்றார். பூஜாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம், பூஜாரியின் மறைவிற்கு பின்னர் அவரது மனைவிக்கு வழங்க வேண்டும். 20 முதல் 60 வயது வரையுள்ள பூஜாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை, இலவச பஸ் பாஸ், வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.