குற்றாலம் சித்திரசபை திறந்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2012 11:08
குற்றாலம் : குற்றாலம் சித்திரசபையை திறந்து பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்குற்றாலத்திலிருந்து ஐந்தருவு செல்லும் பாதையில் சித்திரசபை உள்ளது. இது இறைவன் திருநடனமாடும் ஐந்து சபைகளில் ஒன்று. திருவாலங்காடு - இரத்னசபை, தில்லை(சிதம்பரம்) - கனகசபை, திருவாலவாய் - வெள்ளிசபை, திருநெல்வேலி - தாமிரசபை, திருக்குற்றாலம் - சித்திரசபை மற்ற 4 சபைகளில் நடராஜர் விக்கிரமாகக் காட்சியளிக்கிறார். இங்கு ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெறுகின்றதென்று திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.
சித்திரசபைக்கு முன்னர் தெப்பக்குளமும் அதன் மத்தியில் உயர்ந்த கோபுரமுள்ள நீராழி மண்டபமும் மிக அழகுடன் விளங்குகிறது. சபையில் நடராஜபெருமான்தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அன்று இங்கு ஆராதனை நடத்திய பின்பே திரிகூடமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு ஆராதனை நடைபெறும். சடையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக்கண்டு பிரம்மதேவன் ஆதிசக்தி சிவபிரானுடைய சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசகர் முதலியோர் இதனைச்சித்திரசபை என்று அழைத்தனர். காசி பராக்கிரமபாண்டியனால் இச்சபை கட்ட ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
நடராஜபெருமாள் வடக்கேஉள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார். சித்திரசபையிலுள்ள ஓவியங்கள் வெகுகாலத்திற்கு முன் மூலிகை வர்ணத்தால் தீட்டப்பட்டிருநுதன. பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு இங்கு தீட்டப்பட்டடிருந்த மூலிகை ஓவியங்கள் மங்கியதால் தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இப்படி வரலாற்று புகழ்மிக்க சித்திரசபை திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் காணப்படுவதால் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சித்திரசபையில் மூலிகை ஓவியங்களை காணமுடியாமலும், வழிபடமுடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் சித்திரசைபயின் முன்உள்ள தெப்பத்தில் தண்ணீரின்றி காணப்படுவதால் புல் மற்றும் விஷ செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் இப்பகுதியில் சில சமூக விரோத செயல்களும் நடைபெற்றுவருவதாகவும் அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு தலைவர் ஈஸ்வரன் கோவில் நிர்வாகத்தினரிடம் புகார்மனுவும் கொடுத்துள்ளார். புகார மனுமீது கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சித்திரசபையை திறந்து பக்தர்கள் வழிபாடு செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்டவருட கோரிக்கையாக உள்ளது.