பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா நிறைவு பெறுவதையோட்டி வள்ளி தேவயானை சமேத முத்துக்குமாரசாமி கிரிவலம் இன்று மாலை நடைபெறுகிறது.
பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும் வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களிலும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். சித்திரை கழுவு எனும் இவ்விழாவில் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் மலைக்கோயில் கிரிவலம் வரும்போது மூலிகை காற்று வீசுவதால் நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். இன்று அக்னி நட்சத்திர விழா நிறைவடைகிறது. நேற்று கோவை மாவட்டம் தேவனூர் புதூரை சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டி பூட்டி கிரிவலம் வந்தனர். அதன்பின் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று காலை பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசாமி அடிவாரம் திருவீதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். அதன் பின் சுவாமி மாலை 6 மணிக்கு மேல் பக்தர்களுடன் கிரிவலம் நடைபெற உள்ளது.