பதிவு செய்த நாள்
23
மே
2022
10:05
தொண்டாமுத்தூர்: கோவை, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ஆய்வு செய்து, வெள்ளியங்கிரி மலை ஏறியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும் பிப்., முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு, வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டு, பிப்.,28 முதல் இம்மாத இறுதி வரை பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அதிகாலை, 6:25 மணிக்கு கோவிலுக்கு வந்து, பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை, நடராஜர் ஆகியோரை வழிபட்டார். அதன்பின், கோவிலில் உள்ள அன்னதானக்கூடம், பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.
சட்டசபையில் இம்மாத துவக்கத்தில் நடந்த மானிய கோரிக்கையின்போது, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், 5.5 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தங்கும் விடுதி, முடிகாணிக்கை மண்டபம், குளியலறை, கழிப்பறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, தரைமட்டம் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், வெள்ளியங்கிரி மலையில், பாதை அமைப்பது மற்றும் இதர வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ஏழு மலைகளை அடக்கிய வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு நடந்து சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், வனத்துறையினர், போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் மலை ஏறினர். வெள்ளியங்கிரி மலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையிலும் அமைச்சர் சேகர்பாபு, மலை ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக மலை ஏறிய அமைச்சர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், தற்போது வரை, ஒரு அமைச்சர் மலை ஏறியது இதுவே முதல்முறை. இதற்குமுன், 1998ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்த சாவர்க்கர் என்பவர் மலை ஏறினார். ஒரு அமைச்சர் முதன்முதலாக மலை ஏறிய பெருமை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்குதான் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.