பதிவு செய்த நாள்
24
மே
2022
03:05
தொண்டாமுத்துார்;கோவை மாவட்டத்தில், 25 கோவில்களில், 63 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கோவிலுக்கு வரும், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுதிறனாளிகள் வசதிக்காக, கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் வகையில், பேட்டரி கார் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
பின் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:பட்டீஸ்வரர் கோவிலில், 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, 12 ஆண்டுகள் முடிவடைந்ததால், உடனடியாக திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்ய, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது உப கோவில்களில், திருப்பணிகளை மேற்கொள்ள, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, 25 கோவில்களில், 63 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், அடுத்த மாத இறுதிக்குள், லிப்ட் அமைக்கும் பணி துவங்கப்படும். வெள்ளியங்கிரி மலை ஏறியது, புதிய அனுபவம். அதிக காற்று, அதிக குளிர், அதோடு, செங்குத்தாக அமைந்திருக்கும் மலை. பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை உள்ளது. பழநி இடும்பன் மலை மற்றும் கோவை அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கும், ரோப்கார் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கை பெறப்பட்டுள்ளது.கடந்தாண்டு, 662 கோடி ரூபாய், கோவில் திருப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இந்தாண்டு, 1,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,500 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.