திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்பு பால்குட திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2022 03:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு ஜூன் 12ல் விசாக பால்குட திருவிழா நடக்கிறது.
விசாக திருவிழா அன்று கோயிலில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள சண்முகர் அதிகாலை கம்பத்தடி மண்டபத்திலுள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வார். திருப்பரங்குன்றம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு வருவர். அவர்கள் கொண்டுவரும் பால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காலை முதல் மதியம் வரை அபிஷேகம் செய்யப்படும். கொரோனா தடை உத்தரவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாக பால்குட திருவிழா ரத்து செய்யப்பட்டு, கோயிலுக்குள் சுவாமிகளுக்கு மட்டும் கோயில் சார்பில் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தடை உத்தரவு தளர்வுகளால் இந்த ஆண்டு கோயிலில் விசாக பால்குட திருவிழா ஜூன் 3 அன்று சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆட்டம் நடக்கும். ஜூன் 12 அன்று பால்குட திருவிழாவும், ஜூன் 13ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மொட்டையரசு திடலில் எழுந்தருளி திருவிழா நடக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பக்தர்கள் பங்கேற்புடன் பால்குட திருவிழா நடக்க இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.