பதிவு செய்த நாள்
24
மே
2022
06:05
குளித்தலை அடுத்த, பில்லுார் பஞ்., 8 பட்டி கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ராஜகணபதி, பகவதி அம்மன், பிடாரி அம்மன், காளியம்மன், பாம்பாலம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களுக்கு பில்லுார் பஞ்., 8 பட்டி கிராம மக்கள் சார்பாக, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 22 நாள் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல், இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அப்போது, காவிரி நதியிலிருந்து புன்னிய தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, கோவில் பூசாரிகள் மற்றும் 8 பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், காப்பு கட்டி, 22 நாள் திருவிழா தொடங்கினர். அதன்பின், கிராம மக்கள் அனைவரும், 22 நாள் விரதமிருந்து, ஒவ்வொரு கோவில்களுக்கும் திருவிழா நடத்த தொடங்கினர். முதல் நாள் திருவிழாவாக, பகவதி அம்மனுக்கு, கரகம் பாலித்து வீதி உலா வந்து, கோவில் குடிபுகுந்தது. பின், பொங்கல், மாவிளக்கு, மொட்டை அடித்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்து, கிராம மக்கள் பகவதி அம்மனை வழிபட்டனர். அதன்பின், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது. விழாவில், சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.