அன்னூர்: பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. பிள்ளையப்பன்பாளையம், செல்வநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. காடை குல மக்களின் குலதெய்வம். இக்கோவிலில் பூச்சாட்டு மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. 20ம் தேதி காலையில் அம்மனுக்கு, 108 அபிஷேகமும், மாலையில், 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது.
21ம் தேதி இரவு பஜனை மற்றும் வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. 22ம் தேதி மாலையில், பக்தி இன்னிசை கச்சேரியும், கரகம் கொண்டு வருதலும், சலங்கை ஆட்டமும் நடந்தது. 23ம் தேதி இரவு கரகம் கொண்டு வருதல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வள்ளிகும்மி ஆட்டமும், அணிக்கூடை மற்றும் சக்தி கரகம் எடுத்து வருதலும், அம்மன் அழைப்பும் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு செல்வநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மாவிளக்குடன் வழிபாடு நடந்தது. இதையடுத்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. திருவிழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.