பதிவு செய்த நாள்
03
ஆக
2012
11:08
எந்தச்சூழலிலும் பிறருக்கு உதவுங்கள்
ஒருமுறை இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களிடம், வாழ்வில் சிரமப்பட்ட ஒருவர் தன் நிலையைக் கூறி உதவி செய்யும்படி வேண்டினார். அப்போது இமாம், பள்ளிவாசலில் இஃதிகாபில் ( இறை தியானம்) இருந்தார். "இஃதிகாபில் இருப்பதால் வெளியே வர முடியவில்லை என்றார். உடனே அவர், இமாம் ஹஸன் (ரலி) அவர்களிடம் சென்று உதவி கேட்டார். அவரும் இஃதிகாபில் தான் இருந்தார். ஆனாலும், அவர் வந்தவருக்கு உதவுவதற்காக கிளம்பி விட்டார். வந்தவருக்கு சந்தேகம். முன்னவர் இஃதிகாபிலிருந்து எழவில்லை. ஆனால், பின்னவர் வந்து விட்டார். இதற்கான காரணத்தை இமாம் ஹஸன்(ரலி) அவர்களிடமே கேட்டு விட்டார். அதற்கு இமாம் ஹஸன் அவர்கள், ""யார், தன் சகோதர முஸ்லிமின் உதவிக்காக வெளியேறி, அவருடைய தேவையை
நிறைவேற்றுகிறாரோ, அவருக்கு ஒரு ஹஜ்ஜூம், உம்ராவும் (இதுவும் ஒரு புனித யாத்திரை) செய்த நன்மை உண்டு. ஆனால், உதவி கிடைக்காவிட்டால், உம்ரா மட்டுமே செய்த நன்மை உண்டு. எனக்கு ஹஜ், உம்ரா இரண்டின் பயன் கிடைப்பதால் நான் வெளியேறி வந்தேன், என்றார்கள். ""ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்றுவதற்காக முயற்சி மேற்கொள்வது, பத்து வருடங்கள் இஃதிகாப் இருப்பதை விட உயர்வானதாகும், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். எந்த நிலையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்பதே இன்றைய சிந்தனையாக அமையட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29