பதிவு செய்த நாள்
03
ஆக
2012
11:08
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடிப் பவுர்ணமியை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள், "கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்தனர். இக்கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 25ல் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை தங்கப் பல்லக்கிலும், இரவில் முறையே சிம்மம், அனுமார், பூச்சப்பரம், கருடன், யானை, சேஷ வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் கோயிலை வலம்
வந்தார். முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமா தேவியருடன் தேரில் எழுந்தருளினார். அங்கு சர்வ அலங்காரங்கள் முடிந்து, தீப ஆராதனைகள் நடந்தன. காலை 9.15 மணிக்கு தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில் நாட்டார்கள் தேருக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். பின் 9.20 மணிக்கு "கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடி, அசைந்து புறப்பட்ட தேர், காலை 10.45 மணிக்கு நிலைக்கு திரும்பியது. இரவு பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் தேரோடும் பாதையில் எழுந்தருளினார். இந்தாண்டு தேரோடும் பாதைகள் ரூ.1.75 கோடியில் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டன. ரூ.20 லட்சத்தில் தேருக்கு ஹைட்ராலிக்
சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் சுலபமாக தேரை இழுத்தனர். இன்று(ஆக., 3) காலை உற்சவ சாந்தி நடக்கிறது. நாளை(ஆக., 4) சாற்று முறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார், துணை கமிஷனர் தலைமையில் பேஸ்கார்கள் கணேசன், சேது, மனோகரன் மற்றும் பணியாளர்கள் செய்தனர். வெளியிடங்களிலிருந்து கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டது. டி.எஸ்.பி., அருள் அமரன் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.