பதிவு செய்த நாள்
03
ஆக
2012
12:08
போடி:தமிழக-கேரள பகுதிகளில் மழையின்றி ஆறுகள் வறண்டுள்ள நிலையில், போடி காசிவிஸ்வநாதர் கோயில் கொட்டகுடி ஆற்றில், நேற்று ஊற்று தோண்டி பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆற்று பகுதியில் மண், மாவினால் ஆன அம்மன் சிலை செய்து பெண்கள் வழிபடுவர். தாலி நிலைத்து நிற்கவும், நினைத்த காரியம் கைகூடவும், மும்மாரி மழை பெய்யவும், குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து நிற்கவும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடத்துவர். வெற்றிலையில் சூடம் ஏற்றி பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுநீரில் மிதக்க விடுவர்.
கடந்த ஆறு மாதமாக மழை பொய்த்து விட்டதால், ஆறுகள் வறண்ட நிலையில் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.நேற்று ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக ஆற்றுப்பகுதிக்கு சென்ற பெண்கள், வறண்ட நிலையை கண்டு ஏமாற்றமடைந்தனர். வேறு வழியின்றி பெரும் பள்ளம் தோண்டி, ஊற்று நீரில் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். பல இடங்களில் அருகில் தோட்டங்களில் உள்ள போர்வெல் தண்ணீரை ஆற்றில் விட்டு, குறைந்த அளவு தண்ணீரில் கொண்டாடினர். ஆற்று நீரில் கொண்டாட வேண்டிய ஆடிப்பெருக்கு விழா,ஊற்று நீரில் கொண்டாடும் நிலை ஏற்பட்டதை எண்ணி பெண்கள் வேதனைப்பட்டனர்.
*தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்,முல்லை பெரியாற்றில் பெண்கள் வழிபாடு நடத்தி தாலி மாற்றிக்கொண்டனர்.