பதிவு செய்த நாள்
03
ஆக
2012
12:08
பேரூர் : தினமலர் செய்தி எதிரொலியாக, ஆடிப்பெருக்கு விழாவன்று,பேரூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம், தண்ணீர் வசதி செய்யப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும், ஆடிப்பெருக்குவிழா, நொய்யல் படித்துறையில், சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டில், நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்தது.
வறண்ட நொய்யல் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா என்ற தலைப்பில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரப்பட வேண்டுமென வலியுறுத்தி, நேற்றைய தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், பேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில், படித்துறையிலுள்ள பேரூராட்சிக்கு
சொந்தமான போர்வெல் குழாயிலிருந்து, 60 அடி பிவிசி பைப், 15 அடி உயரத்துக்கு, லீப்பர் உதவியுடன் ஆற்றின் மையப்பகுதியில் பொருத்தப்பட்டது. பிவிசி பைப்பில், 13 இடங்களில் துளையிட்டு, போர்வெல் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. காலை 5.00 மணிக்கே பக்தர்கள் திரண்டு வந்து, தண்ணீரில் குளித்தனர். ஆறு வறண்டிருந்தாலும், தினமலர் செய்தி காரணமாக, பேரூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம், போர்க்கால நடவடிக்கையாக, தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்ததால், பக்தர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஏழு கூழாங்கல்லின் விலை காலை ரூ. 5; மதியம் ரூ. 10 ஆடிப்பெருக்கு விழாவில், ஆற்றங்கரையில், ஏழு கூழாங்கற்களை சப்தகன்னமார்களாக பாவித்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், படித்துறை பகுதியில், காலை 5.00 மணிக்கு, ஐந்து ரூபாய்க்கு விற்ற ஏழு கூழாங்கல், பகல் 12 மணிக்கு மேல், 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கட்டு தாழமடல் ஐந்து ரூபாய்க்கு விற்றது. ஆற்றின் இருமருங்கிலும் புதிது, புதிதாக கடைகள் முளைத்திருந்தன.