பிறருக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக இருப்பவன் அமீர். இவனது அம்மாதான் அதற்கு காரணம். ‘பிறருக்கு உதவினால் இறைவனின் அன்பை பெறலாம்’ என்பதை குழந்தை பருவத்திலேயே அவனுக்கு விதைத்துவிட்டார். கல்லுாரி படிப்பை முடித்த அவன் வேலை தேடிக் கொண்டிருந்தான்.
ஊடகத்துறையில் பணிபுரிந்தால் பலருக்கு உதவலாம் என்பது அவனது எண்ணம். அது போலவே பத்திரிகை நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.
நேர்முகத் தேர்வு அன்று அம்மாவிடம் ஆசி பெற்று சீக்கிரமாக புறப்பட்டான். வழியில் வயதான ஒருவர் தன் கார் டயரை பார்த்தபடி நின்றிருந்தார். அவர் அருகில் அவன் சென்ற போது, ‘‘ டயர் பஞ்சராகி விட்டது. பக்கத்தில மெக்கானிக் ஷாப் இருக்கா’’ எனக் கேட்டார். ‘‘ஐயா... மெக்கானிக் ஷாப் இல்லை. வேண்டுமானால் நான் சரி செய்கிறேன்’’ என டயரை கழற்ற ஆரம்பித்தான். ‘‘ வேண்டாம் தம்பி. நீங்க ஆபீஸ் போக லேட் ஆயிடும்’’ என்றார். ‘‘ஐயா... சீக்கிரமாகவே கிளம்பிட்டேன். இன்னும் நேரம் இருக்கிறது’’ என சொல்லியபடியே டயரை சரி செய்தான். ‘‘ தேங்க்ஸ் தம்பி. இதை வச்சுக்கோங்க’’ என்று ஐநுாறு ரூபாயை நீட்டினார் அவர். ‘‘ஐயா... பணம் எல்லாம் வேண்டாம். மனிதாபிமான முறையில்தான் உதவினேன்’’ என்று கிளம்பினான். அலுவலகம் வந்து சேர்ந்த அமீருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நேர்முகத்தேர்வு நடத்துபவரே அந்த வயதானவர்தான். பிறகு என்ன... அமீருக்கு வேலை கிடைத்தது. பார்த்தீர்களா.. பயன் கருதாமல் பிறருக்கு உதவுங்கள். இறைவனின் அருளால் உங்களுக்கும் பரிசு காத்திருக்கும்.