பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
09:06
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோவில்களைச் சேர்ந்த 10 புராதன சிலைகள் மீட்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட புராதன சிலைகள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு போலீசாரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தீவிர விசாரணைக்குப் பின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் இருந்து, 10 உலோக மற்றும் கற்சிலைகள், டில்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம், ஒப்படைக்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை, தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, டில்லியில் நடைபெற்றது. மத்திய கலாசாரதுறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இந்த சிலைகளை தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம், ஒப்படைத்தார்.கலாசாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால், மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பின், சைலேந்திரபாபு கூறியதாவது: தமிழக கோவில்களைச் சேர்ந்த 138 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், தற்போது, மேலும் 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இவை மிகவும் பழமைவாய்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள். இன்னும் சில சிலைகள் வெளிநாட்டில் உள்ளன.அவை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், மொத்தம் எவ்வளவு என்ற துல்லியமான விபரம் இல்லை என்றாலும், படிப்படியாக விசாரணை நடத்தி அவை மீட்கப்படும்.தமிழக கோவில்களில், தற்போது இருக்கும் சிலைகளை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினர், அறிந்து கொள்ளவும், டிஜிட்டல் முறையில் அவைகளை பதிவு செய்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -