வீரராகவர் கோயில் முன் பேராயருக்கு வரவேற்பு; ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2022 06:06
திருவள்ளூர் : பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் முன் பக்தர்களுக்கு தொல்லை தரும் வகையில் கிறிஸ்தவ பேராயரை வரவேற்று பேனர் வைத்ததோடு பட்டாசு வெடித்து ரகளை செய்ததற்கு ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவள்ளூர் ஈக்காடு சந்திப்பில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஞானஸ்னானம் வழங்கும் நிகழ்ச்சி மே 29ல் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபனை வரவேற்று வீரராகவ பெருமாள் கோயில் முன் மெகா பேனர் வைக்கப்பட்டிருந்தது. அக்கோயில் தேரடி முன் கிறிஸ்தவர்கள் பெருமளவு கூடினர். பேராயரை வரவேற்று பட்டாசு வெடித்தனர். கோயில் முன்தேரடி சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோயிலுக்குள் சென்று வர பக்தர்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து முன்னணி விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.வைச் சேர்ந்தவர்கள் பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்களை திருவள்ளூர் டவுன் போலீசார் சமாதானபடுத்தினர். பக்தர்கள் எதிர்ப்பாலும் போலீசாரின் செயல்பாடுகளாலும் பேராயரை வரவேற்க வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த பிரச்னை குறித்து ஹிந்து அமைப்பினர் திருவள்ளூர் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். மே30 காலை வீரராகவர் கோயில் மண்டபத்தில் இருந்த பேனர் அகற்றப்பட்டது.