பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
03:06
புதுச்சேரி: மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் புதுச்சேரி ரெயின்போ நகரில் புதுப்பிக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்திற்கு வரும் 5ம் தேதி வருகை தந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் புதிதாக அமைந்துள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட திருகுடமுழக்கு விழா வரும் 5ம் தேதி நடக்கிறது. இதனை மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் பங்கேற்று நடத்தி வைக்கிறார்.இதனையொட்டி, அவர், நாளை 4ம் தேதி மாலை 3 மணியளவில் மேல்மருவத்துாரில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரி கோரிமேடு எல்லையை வந்தடைகிறார்.அவருக்கு சொக்கநாதன் பேட்டை, ரெயின்போ நகர், முத்தியால்பேட்டை உள்ளடங்கிய புதுச்சேரி மாநில நிர்வாகக்குழுவினர், மூன்று சக்தி பீடங்கள், 21 மன்றங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க, கிராமிய கலைகளுடன் வரவேற்பு அளிக்கின்றனர்.அதனை ஏற்கும் அவர், முருகா சிக்னல், கதிர்காமம், சண்முகாபுரம், மேட்டுப்பாளையம் வழியாக ஊசுடு ஏரியில் உள்ள சொந்த பண்ணையில் ஓய்வு எடுக்கிறார்.எனவே, வழி நெடுகிலும் புதுச்சேரி மாநில செவ்வாடை தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். தொடர்ந்து 5ம் தேதி காலை 8 மணியளவில் ஊசுடேரியில் இருந்து புறப்பட்டு ராஜிவ், இந்தி ராகாந்தி சிக்னல், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர் மற்றும் கன்னிக்கோயில் வழியாக சிதம்பரம் செல்கிறார். சிதம்பரத்தில் உள்ள முத்தையா நகர் சித்தர் சக்தி பீடத்திற்கு சென்று திருகுடமுழக்கு விழாவினை நடத்தி வைக்கிறார். தொடர்ந்து தவளக்குப்பம், அரியாங்குப்பம், முருகா சிக்னல், இ.சி.ஆர்., கிருஷ்ணா நகர் வழியாக புதுச்சேரி ரெயின்போ நகரில் புதுப்பிக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்திற்கு வருகை தந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.தொடர்ந்து ரெயின்போ நகரில் புதிதாக அமைந்துள்ள 80வது அவதார திருநாள் நினைவு சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைத்து ஆசி வழங்குகிறார்.