மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத திருவிழா வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று(ஜூன் 3) கொடியேற்றமும், ஜூன் 7 பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி மேலுாருக்கு எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து ஜூன் 10 திருக்கல்யாணமும், ஜூன் 11 ல் தேரோட்டமும் நடைபெறுகிறது.
புராண வரலாறு – ஆங்கிலேயர் காலத்தில் மேலுாரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாதவூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பது வழக்கம். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. அதனால் மேலுாரில் தாசில்தார் சிவலிங்கம் அமைத்து கொடுத்தும் திருவாதவூர் செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. அப்போது சிவன் அவரது கனவில் தோன்றி நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என கூறியுள்ளார். அதன்படி ஜூன் 7 ல் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனால் இவ் விழாவில் தாசில்தாருக்கு இன்றும் முதல் மரியாதை வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், துணை ஆணையாளர் அருணாச்சலம் செய்துள்ளனர்.